Monday, September 10, 2012

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 9வது அகில இந்திய மாநாடு  பெங்களூரில் இன்று மாபெரும் பேரணி
பெங்களூரு, செப். 10 -

இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாடு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் செப்டம்பர் 11ம்தேதி பிரம்மாண்டமான பேரணியுடன் துவங்குகிறது.

நாடு முழுவதும் 1.5 கோடி இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள, உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைஞர் இயக்கமாம் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 11 முதல் 15ம்தேதி வரை பெங்களூரு டவுண்ஹால் அரங்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி செவ்வாயன்று பெங்களூரு ரயில்நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் பேரணி துவங்குகிறது. நிறைவில் பானப்பா பூங்காவில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி துவக்கி வைக்கிறார். இந்தக்கூட்டத்தில் சமூகப்போராளியும் நாடறிந்த கலைஞருமான மல்லிகா சாராபாய் உரைநிகழ்த்துகிறார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கேரள முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் தபஸ் சின்கா, விடுதலைப்போராட்ட வீரர் எச்.எஸ்.தொரசாமி, வாலிபர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் முகமது சலீம், கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.ஸ்ரீராமரெட்டி, ஜி.சி. பையாரெட்டி ஆகிய தலைவர்கள் உரைநிகழ்த்துகின்றனர்.

சங்கத்தின் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற உள்ள இப்பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் உள்ளிட்ட அகில இந்திய நிர்வாகிகள், பி.ராஜசேகர மூர்த்தி உள்ளிட்ட கர்நாடக மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மாநாடு

இதைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணியளவில் பெங்களூரு டவுண்ஹாலில் மாநாட்டுத் துவக்கவிழா நடைபெறுகிறது. வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் பரகுரு ராமச்சந்திரப்பா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

மாநாட்டைத் துவக்கி வைத்து பிரபல திரைப்பட இயக்குநர் டாக்டர் ஷியாம் பெனகல் உரையாற்றுகிறார்.

எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 12 முதல் 15 வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.

கொடிமரப் பயணம்

இம்மாநாட்டை நோக்கி, சென்னையிலிருந்து கொடிமரம் கொண்டுசெல்லும் பயணம், சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சைலேந்திர காம்லே தலைமையில் புறப்பட்டது. இப்பயணக்குழுவிற்கு காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. திங்களன்று மாலை ஓசூரில் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று காலை இப்பயணக்குழு பெங்களூரு வந்தடைகிறது.

இக்குழுவில் சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், செய லாளர் ஆர்.வேல்முருகன், பொருளாளர் எஸ்.பாலா, துணைத் தலைவர் இல.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து, வாலிபர் சங்கத்தின் 10லட்சத்து 53 ஆயிரம் உறுப்பினர்களது பிரதிநிதிகளாக 45 பேர் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment